கற்றல் விளைவுகள் 100 சதவீதம் மாணவர்களை அடைய செய்ய வேண்டும்

கற்றல் விளைவுகள் 100 சதவீதம் மாணவர்களை அடைய செய்ய வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் குமார் கூறினார்.;

Update: 2022-12-29 19:24 GMT

ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே உள்ள தேர்வுக்கூட அரங்கில் கற்றல் விளைவுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் வரவேற்றார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் குமார் தலைமை தாங்கி கூறியதாவது:-

கற்றல் விளைவுகள் இதுவரை 100 சதவீதம் சென்றடையாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. சில நுணுக்கங்களை ஆசிரியர்களுக்கு சரிவர கற்றுக் கொடுக்காததால் இதுவரை உரிய வகுப்புகளுக்குரிய கற்றல் விளைவுகள் சென்றடையவில்லை.

கற்றல் விளைவுகள்

மாணவர்களுக்குரிய கற்றல் விளைவுகளை அடையச்செய்து கற்றல் அடைவை 100 சதவீதம் வெளிக் கொண்டு வர வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை 302 கற்றல் விளைவுகளும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 620 கற்றல் விளைவுகளும் என மொத்தம் 922 கற்றல் விளைவுகள் உள்ளன. எனவே ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் அடையக்கூடிய கற்றல் விளைவுகள் ஒவ்வொரு ஆண்டும் சென்றடைவதை நீங்கள் உறுதி செய்து வழிகாட்ட வேண்டும்.

விடுமுறைக்கு பிறகு தொடங்க இருக்கும் 3-ம் பருவத்தில் கற்றல் விளைவுகள் குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து கற்றல் விளைவுகள் பற்றி ஆசிரியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக நிவர்த்தி செய்து அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே 100 சதவீத மாணவர்களுக்கு கற்றல் விளைவுகள் சென்றடைவதை நீங்கள் உறுதி செய்து சிறந்த முறையில் வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்