தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது -அண்ணாமலை பேச்சு
கவர்னர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறினார்.;
ஈரோடு,
தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ''என் மண், என் மக்கள்'' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டம் சிவகிரி, பெருந்துறை பகுதிகளில் நேற்று முன்தினம் நடைபயணம் செய்தார். இதைத்தொடர்ந்து ஈரோட்டில் நேற்று மாலையில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அவரது நடைபயணம் தொடங்கியது. அங்கிருந்து ஈரோடு சத்திரோடு, சுவஸ்திக் கார்னர், பஸ் நிலையம், மேட்டூர்ரோடு, ஈ.வி.என்.ரோடு, சூரம்பட்டி நால்ரோடு வழியாக சூரம்பட்டி பஸ் நிறுத்தம் வரை அண்ணாமலை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். பின்னர் சூரம்பட்டியில் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கு பாதிப்பு
உலக புகழ் பெற்ற தமிழ்நாடு போலீசுக்கு தி.மு.க. களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறது. கவர்னர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சென்னை கமிஷனர் பேட்டி கொடுக்கிறார். அதாவது கத்தியை எடுத்து வெட்டியும் சாகவில்லை என்பதுபோல் அவரது பேச்சு உள்ளது.
கோவையில் தற்கொலை தீவிரவாதியால் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஆம்னி வேனில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. ஆனால் அதை சிலிண்டர் விபத்து என்று முதல்-அமைச்சர் கூறி வருகிறார். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்படி தானே கூறுவார்.
வாக்குறுதிகள்
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று தி.மு.க.வினர் பொய் சொல்லி வருகின்றனர். பொய் சொல்லுவதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கப்பதக்கமே கொடுக்கலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் 511 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 20 வாக்குறுதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அமைச்சர் முத்துசாமியின் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் அவரே குடிகாரர்களை, மதுபிரியர்கள் என்று அழைக்க வேண்டும் என கூறும் அளவுக்கு தி.மு.க.வினர் மாற்றி விட்டனர். எனவே நல்லவர்களே இருக்க முடியாத இடமாக தி.மு.க. உள்ளது.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.