வாலாஜாபாத் அருகே நள்ளிரவில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு
வாலாஜாபாத் அருகே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 20 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.;
வாலாஜாபாத் அருகே ஐயன்பேட்டையில் தாலுகா ஐயன்பேட்டை சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி விடுமுறை காரணமாக வினோத்குமாரின் மனைவி வனிதா (30), தனது இரு குழந்தைகளை அழைத்து கொண்டு காஞ்சீபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் வினோத்குமார் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, பணி முடிந்து காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த நிலையில், நள்ளிரவில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 20 பவுன் தங்கநகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார், வீட்டை தீவிரமாக சோதனை செய்து வினோத்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே திருட்டுச் சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.