மகாமாரியம்மன் கோவிலில் தைமாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு
வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் தைமாத கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.;
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக்கோவில், அம்மன் சக்தி தலமாக போற்றப்படுவதுடன், டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு மறுஉயிர் தந்து, பக்தர்களால் பெரிதும் நம்பப்படுவதால், படைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனால் இந்த கோவிலில் உள்ள மகாமாரியம்மன், படைக்காவடி அம்மன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்த தினமான நேற்று, அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது. முன்னதாக கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மாலை வெள்ளி அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில், வலங்கைமான் பகுதி முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் வீதிஉலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.