விக்கிரவாண்டி அருகே விபத்து:லாரி சக்கரத்தில் சிக்கி ஐ.டி. நிறுவன உதவி மேலாளர் சாவுவிடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற போது பரிதாபம்
விக்கிரவாண்டி அருகே தனியார் ஐ.டி. நிறுவன உதவி மேலாளர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற போது இந்த விபத்து நேர்ந்தது.;
விக்கிரவாண்டி,
மதுரை திருமங்கலம், திருச்செந்தூர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் விஷ்ணு(வயது 26).
இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில், உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் விஷ்ணு நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மதுரைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காலை 6.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே வந்து கொண்டிருந்தார்.
உடல் நசுங்கி சாவு
அப்போது, அங்கு போலீசார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், சாலையில் பேரிகார்டுகள் வைத்திருந்தனர். இதன் வழியாக விஷ்ணு சென்ற போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையின் மீது மோதியது.
இதில் அவர் சாலையில் விழுந்தார். அந்த சமயத்தில், அதே திசையில், அவருக்கு பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் விஷ்ணு மீது ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
விபத்து பற்றி அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரான மதுரையை சேர்ந்த செல்வம் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.