சேலத்தில் லாரி மோதி தலை நசுங்கி வாலிபர் பலி ஆட்டோ டிரைவரிடம் விசாரணை

சேலத்தில் லாரி மோதியதில், வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2022-06-24 21:03 GMT

கன்னங்குறிச்சி, 

பலி

சேலம் கன்னங்குறிச்சி பெத்தான் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 22). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் கொண்டப்பநாயக்கன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் ஒரு ஷேர் ஆட்டோ திடீரென்று திரும்பியதில், மோட்டார் சைக்கிள் மீது இடித்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து சந்தோஷ்குமார் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சந்தோஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ டிரைவர்

இது குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே பலியான சந்தோஷ்குமாரின் உறவினர்கள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கொண்டப்பநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போட்டிப்போடுவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றும், சந்தோஷ்குமார் பலியானதற்கு காரணமான டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்