மண் சரிந்து வீடு சேதம்
பந்தலூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிந்து வீடு சேதமடைந்தது.
பந்தலூர்
பந்தலூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிந்து வீடு சேதமடைந்தது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
பந்தலூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரங்கோடு, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றன.
பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக நெல்லிமேடு, அம்பலவயல், மாங்கோடு, கொளப்பள்ளி, ஏலமன்னா, கக்குண்டி ஆகிய பகுதிகளில் மின் கம்பிகள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
வீடு சேதம்
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள மண் சரிந்து சமையல் அறைக்குள் விழுந்தது. இதனால் வீடு சேதம் அடைந்தது. மேலும் வீட்டிற்குள் மண் கிடந்தது. பந்தலூரில் இருந்து பாறைக்கல் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.
அய்யன்கொல்லி, கொளப்பள்ளி வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் வாகன விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடையும் அபாயம் உள்ளது. பலத்த மழையால் கிராம பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக உள்ள கிணறுகள் நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.