போலி ஆவணம் தயாரித்து மனை இடம் பத்திரப்பதிவு; 3 பேர் கைது

தேவகோட்டையில் ஆள் மாறாட்டம் செய்து மனை இடத்தை பத்திரப்பதிவு செய்ததாக 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-02 18:45 GMT

சிவகங்கை,

தேவகோட்டையில் ஆள் மாறாட்டம் செய்து மனை இடத்தை பத்திரப்பதிவு செய்ததாக 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மனை இடம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு சரவணன் என்பவரிடம் தேவகோட்டை செல்வவிநாயகர் நகரில் மனை இடம் ஒன்றை விலைக்கு வாங்கினாராம். அதன்பின்னர் ராமச்சந்திரன் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி அஸ்வினி மற்றும் குடும்பத்தினர் மட்டும் தேவகோட்டையில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ராமச்சந்திரன் என்பவர் தேவகோட்டை செல்வ விநாயகர் நகரில் உள்ள மனை இடத்தை தேவகோட்டை ராம் நகரில் இருக்கும் ராமநாதன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்தார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருக்கும் ராமச்சந்திரனின் மனைவி அஸ்வினி தன்னுடைய கணவர் வாங்கிய இடத்திற்கு பட்டா கேட்டு சென்றபோது அதே இடத்திற்கு ராமநாதனும் பட்டா கேட்டு வந்ததாக தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அஸ்வினி இதுகுறித்து தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் இடத்தை விற்பனை செய்த ஆவணங்களை பார்த்தபோது அவை போலியாக தயாரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சார்பதிவாளர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் கங்கா தேவி ஆகியோர் விசாரணை நடத்தி ராமச்சந்திரன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் தயாரித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாக ராமச்சந்திரன், ராமநாதன், பாலமுருகன், வெளிவயலை சேர்ந்த சேகர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் ராமநாதன், பாலமுருகன், சேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்