மழையால் சேதமடைந்த தரைப்பாலம்

கொடைக்கானல் அருகே, மழையால் தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் கயிறு கட்டி கிராம மக்கள் ஆற்றை கடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2023-07-12 17:42 GMT

ஆற்றின் குறுக்கே தரைப்பாலம்

கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி அடிசரை குடியிருப்பு பகுதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.

கொடைக்கானலில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு செல்ல ஆற்றை கடக்க வேண்டும். மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவது வாடிக்கை. இதனால் ஆபத்தான முறையில் கயிறு கட்டி கிராம மக்கள் ஆற்றை கடந்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் தங்களது சொந்த செலவில், ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்தனர். இதனால் பொதுமக்கள் சிரமம் இன்றி ஆற்றை கடந்து வந்தனர்.

தீவாக மாறிய குடியிருப்பு

இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. அதன்படி அடிசரை குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியவில்லை.

இதுமட்டுமின்றி பலத்த காற்று வீசியதால் மின்சாரம் மற்றும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் தகவல்களை பரிமாற முடியாத அளவுக்கு அந்த குடியிருப்பு தீவு போல மாறி விட்டது.

கயிறு கட்டி...

கிராமத்தை விட்டு வெளியே வரமுடியாமல் தங்களது வீடுகளிலேயே கிராம மக்கள் முடங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகும் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதனால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். ஒருவரையொருவர் கைகளால் சங்கிலி போல பிடித்து கொண்டும், கயிறு கட்டியும் சிரமத்துடன் ஆற்றை கடந்து வருகின்றனர். இதைத்தவிர அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மலைக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இதுவரை அரசு அதிகாரிகள் அந்த கிராமத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது கிராம மக்களின் வேதனையாக எதிரொலிக்கிறது. எனவே மலைக்கிராம மக்களின் நலன் கருதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்