விழுப்புரத்தில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த ஏரிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
விழுப்புரத்தில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த ஏரிகளால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
காலச்சக்கரம் வேகமாக சுழல, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக நம் நீராதாரங்களை பாதுகாக்கும் முயற்சி முன், எப்போதையும் விட தற்போது மிகவும் தீவிரமாகியுள்ளது. கடந்த வருடங்களில் தண்ணீர் பிரச்சினை வாட்டி வதைக்க, இதை சமாளிக்க பல இடங்களில் இருந்து வாகனங்கள் மூலம் தண்ணீர் வினியோகிக்கும் நிலை உருவானது. இதுபோன்ற சூழ்நிலை உருவாவதை தடுக்க நீர்நிலைகளை காப்பதே ஆகச்சிறந்த ஒரே வழியாகும். இதற்காக ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை காக்கும் முயற்சியில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
விழுப்புரம் நகர ஏரிகள்
நீர்நிலைகளை பாதுகாக்கும் விஷயத்தில் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதுபோல் நீர்நிலைகளில் அசுத்தம் நிறைந்த நீரை கலக்காமலும், தண்ணீரை மாசுப்படுத்தாமல் பாதுகாப்பதிலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்கு உண்டு. அதை பலர் உணர்ந்து செயல்படாததால் ஆங்காங்கே நீர்நிலைகளில் கழிவுநீர் கலந்து அங்கிருக்கும் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் ஏரிகளை பாதுகாக்கும் முயற்சியில் பொதுப்பணித்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அலட்சியமாக இருப்பதால் பல ஏரிகளில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள 2 ஏரிகளே சாட்சியாகும்.
கழிவுநீர் கலப்பு
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 506 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 780 ஏரிகளும் உள்ளன. இதில் விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வி.மருதூர் ஏரி, சாலாமேடு பொன்னேரி. இவற்றில் வி.மருதூர் ஏரியானது 114 ஏக்கர் பரப்பளவும், சாலாமேடு பொன்னேரி 140 ஏக்கர் பரப்பளவையும் கொண்டது. மழைக்காலங்களில் இந்த ஏரிகளுக்கு வரும் தண்ணீர் மூலம் விழுப்புரம் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் மற்றும் நகரை சுற்றியுள்ள காவணிப்பாக்கம், வேலியம்பாக்கம், சாமிப்பேட்டை, கொளத்தூர், பானாம்பட்டு, பில்லூர் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு பாசன வசதிக்கும் முக்கியமானதாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளின் பாசனத்தை நம்பியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள ஏரிகளில் கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்துள்ளது. குறிப்பாக ஏரிகளின் கரையோரங்களில் வசிக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மட்டுமல்லாது நகரின் பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இந்த ஏரிகளில் கலந்து வருகிறது. அதுமட்டுமின்றி விழுப்புரத்தில் உள்ள சாராய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் சாலாமேடு பொன்னேரிக்கு செல்லும் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதால் அவை ஏரியில் கலந்து தண்ணீரை மாசுபட வைத்துள்ளது. இதன் காரணமாக வி.மருதூர், சாலாமேடு ஏரிகளில் உள்ள தண்ணீர் நிறம் மாறியுள்ளதோடு அங்கு வளர்ந்திருக்கும் மரங்கள் ஒவ்வொன்றாக அழுகி வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைக்கிடங்காக...
மேலும் இந்த ஏரிகள் குப்பை கிடங்காகவும் மாற்றப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஏரியில் தேங்கியிருக்கும் கழிவுநீரில் பன்றிகள், நாய்கள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.
இவற்றையெல்லாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஏரிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏனோ நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்குடன் இருப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இத்தகைய நீர் ஆதாரங்களை பாதுகாத்து பராமரிப்பதில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாததன் விளைவாக நீர்நிலைகள் மாசடைந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக்கவனம் செலுத்தி வி.மருதூர், சாலாமேடு பொன்னேரி உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடியாக சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் கலிவரதன் கூறுகையில், விழுப்புரம் நகரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பதில் வி.மருதூர், சாலாமேடு பொன்னேரி ஆகிய 2 ஏரிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. அதுபோல் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசனம் பெறவும் இந்த ஏரிகள் பயன்பட்டு வந்தது.
ஆனால் இன்றைக்கு இந்த 2 ஏரிகளிலும் கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக வந்து கலக்கிறது. இதனால் இந்த ஏரிகள் கழிவுநீர் ஏரிகளாக மாறிவிட்டதால் இந்த ஏரிகளையே நம்பியுள்ள விவசாய விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏரிகளுக்கு வரக்கூடிய கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் எந்திரமும் சரிவர செயல்படாததால் ஏரிகளில் கழிவுநீர் கலந்து தண்ணீர் முழுவதும் மாசடைந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் பிற்காலத்தில் ஏரிகளின் நிலைமை இன்னும் மோசமாகும். இந்த ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை,
அதேநேரத்தில் இந்த ஏரிகளுக்கு வரக்கூடிய வரத்து வாய்க்கால்கள் பல இடங்களில் தூர்ந்து போயுள்ளது. அந்த வாய்க்கால்களை தூர்வாரி சீரமைத்து அதன் வழியாக தென்பெண்ணையாற்று நீர், இங்குள்ள ஏரிகளுக்கு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
போர்க்கால அடிப்படையில் பணிகள்
ஏரி மீட்பு கூட்டமைப்பு நிர்வாகி அகிலன் கூறும்போது, தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க இருக்கும் வேளையில் விழுப்புரத்தில் இருக்கக்கூடிய முக்கியமான ஏரிகளில் முத்தாம்பாளையம் ஏரி, திருவாமாத்தூர் ஏரி, நன்னாடு ஏரி, புது ஏரி, தெளிமேடு ஏரி மற்றும் குளத்து வரத்து வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சரிசெய்ய வேண்டும். மேலும் விழுப்புரம் வி.மருதூர், சாலாமேடு ஏரிகளுக்கு வரும் வரத்து வாய்க்காலையும் சீர்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே வி.மருதூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு கொடுத்துள்ளோம். அதையும் கவனத்தில் கொண்டு கழிவுநீர் கலக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துகிறோம் என்று கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை உறுதி கூறினார்கள். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.