ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் தர்ணா

ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் தர்ணா

Update: 2023-07-12 15:43 GMT

தளி

சீரான குடிநீர் வழங்கக்கோரி உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற 2 பெண் தலைவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக தளி கால்வாய் ஆதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கணக்கம்பாளையம் பூலாங்கிணர் குடிநீர் திட்டத்தை ஒன்றிணைத்து புதிய கணக்கம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அது மட்டுமின்றி அவ்வப்போது சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன், பூலாங்கிணர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன் உள்ளிட்டோர் இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த மன்ற உறுப்பினர்களுடன் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீரான குடிநீர் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், துணைத் தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சிகள்), குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சின்னச்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 15-ந் தேதிக்குள் சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்களுடன் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஊராட்சி மன்ற தலைவர்களின் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.


Tags:    

மேலும் செய்திகள்