அடிப்படை வசதிகள் இல்லை: அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அடிப்படை வசதிகள் இல்லாத அய்யன்கொல்லி அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.;

Update: 2023-07-23 19:00 GMT

பந்தலூர்

அடிப்படை வசதிகள் இல்லாத அய்யன்கொல்லி அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

அங்கன்வாடி மையம்

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அய்யன்கொல்லி, குழிகடவு, செம்பக்கொல்லி, செறியேரி உள்பட பல பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் காலை முதல் மாலைவரை பாதுகாக்கப்படுகின்றனர்.

மேலும் கல்வியும் போதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மழைக்காலங்களில் அங்கன்வாடியின் மேற்கூரையிலிருந்து மழைநீர் சொட்டு சொட்டாக கசிகிறது.

இதனால் குழந்தைகள் நனைகின்றனர். மேலும் சமையல் அறைக்குள் மழைநீர் கசிவதால் அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களும் நனைந்து நாசமாகிறது. மேற்கூரைகளிலிருந்து மழைநீர் கசிவதால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

இதேபோல், ஓடுகள் உடைந்து ஜன்னல்களின் பக்கவாட்டிள் தொங்கியவாறு உள்ளது.

இதனால் குழந்தைகளின் தலையில் ஓடுகள் விழுந்து காயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் நடந்துசெல்லும் நடைப்பாதையும் உடைந்து கிடக்கிறது. அந்த நடைப்பாதையில் நடந்து செல்லும் குழந்தைகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள்.

இதேபோல் அங்கன்வாடி மையத்திற்கு பின்பக்கமாக உள்ள கழிப்பறையின் நடைப்பாதையும் சேரும் சகதியுமாக கிடக்கிறது.

இதனால் குழந்தைகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கன்வாடி மையத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்