2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தொழிலாளி தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு

பணகுடியில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-11 02:18 GMT

கோப்புப்படம் 

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (41 வயது), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு ராபின் (14 வயது) என்ற மகனும், காவியா (11 வயது) என்ற மகளும் இருந்தனர். அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ராபின் 9-ம் வகுப்பும், காவியா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த ரமேஷ் கடந்த 10 மாதங்களுக்கு முன் தனது மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.

இதற்காக ரமேஷ் தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கினார். பின்னர் அவர் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். பணத்தை திருப்பி கொடுக்க முடியாததாலும், தனது மனைவி வெளிநாட்டுக்கு சென்ற பிரிவை தாங்க முடியாமலும் ரமேஷ் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வெகு நேரமாகியும் ரமேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தனர். அப்போது ரமேஷ், அவருடைய மகன் ராபின், மகள் காவியா ஆகியோர் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை மற்றும் மனைவி வெளிநாடு சென்ற ஏக்கத்தில் ரமேஷ் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கும் வாழைப்பழத்தில் குருணை மருந்து (விஷம்) கலந்துகொடுத்தார். பின்னர் தானும் அதனை சாப்பிட்டுள்ளார். இதில் 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்