சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

சம்பள பாக்கி கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

Update: 2023-09-11 13:46 GMT

திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) பொதுச்செயலாளர் சம்பத் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் அங்கேரிப்பாளையம் அருகே ஸ்ரீநகர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பீகார் மாநில தொழிலாளி திலீப்குமார் வேலை செய்து வந்தார். அவருக்கு நிறுவனத்தின் சார்பில் சம்பள பாக்கி கொடுக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து திலீப்குமார் கடந்த 7-ந் தேதி சென்று கேட்டபோது, கொடுக்க மறுத்து நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர் சேர்ந்து திலீப்குமாரை தாக்கியதுடன் கத்திரியால் குத்தி விடுவதாக மிரட்டி விரட்டியடித்துள்ளனர். இதுகுறித்து திலீப்குமார் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர், அரசு மருத்துவமனைக்கு சென்று திலீப்குமாரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் புகாரை வாபஸ் பெற நிர்பந்தம் செய்துள்ளனர். ஆனால் திலீப்குமார் புகாரை வாபஸ் பெறவில்லை. ஏற்கனவே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியால் ஏற்பட்ட பதற்றம் முற்றிலும் தணியாத நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநில தொழிலாளியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்