கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி- தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்

கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-09-12 20:28 GMT

ஈரோடு

கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

ரூ.4 லட்சம்

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேசன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தமிழக அரசின் உத்தரவின்பேரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி வழங்கப்படுகிறது. இதில் சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால், அவர்களாகவே வீடு கட்டி கொள்வதற்கு நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

பட்டா

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்து உள்ள தொழிலாளர்களாக இருக்க வேண்டும். தகுதியான கட்டுமான தொழிலாளர் சொந்த வீட்டுமனை வைத்து இருந்தால், 300 சதுர அடி அல்லது 28 சதுர மீட்டர் அளவில் வீடு கட்டுவதற்கான இடவசதி இருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்.

இதில் பயன்பெறும் கட்டுமான தொழிலாளருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. வேறு எந்த மத்திய, மாநில அரசு சார்ந்த இலவச வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற்றிருக்க கூடாது. கட்டுமான தொழிலாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். சொந்தமாக வீடு கட்ட விரும்பும் தொழிலாளர்களின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினருடன் இணைந்ததாகவோ பட்டா இருக்க வேண்டும். எந்தவித சட்ட சிக்கல்களும், வில்லங்கமும் இருக்க கூடாது. நிலத்தின் உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழிலாளர்கள் தங்களது வாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப உறுப்பனர்களின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றுடன் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு சென்னிமலை ரோடு அரசு ஐ.டி.ஐ.க்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் செயல்படும் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தை அணுகலாம். 0424 2275591, 0424 2275592 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்