கேள்விக்குறியாகும் உள்ளூர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம்

தமிழ்நாடு நோக்கி வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து வருவதால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தீர்வு காணக்கோரி உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-23 12:35 GMT

தமிழ்நாடு நோக்கி வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து வருவதால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தீர்வு காணக்கோரி உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாநில தொழிலாளர்கள்

உடுமலை சுற்றுவட்டரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. இதனால் தேங்காய் பறித்தல், உறித்தல், வாகனங்களில் ஏற்றுதல், கொப்பரை உற்பத்திக் களங்களில் தேங்காய் உடைத்தல், தேங்காய் பருப்பு பிரித்தெடுத்தல் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தென்னை நார் உற்பத்தி, கயிறு திரித்தல் உள்ளிட்ட இதனைச் சார்ந்த தொழில்களிலும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சமீப காலங்களாக கோழிப்பண்ணைகள், உணவகங்கள், ஜவுளி நிறுவனங்கள், மளிகைக் கடைகள், தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்களிலும் வட மாநிலத் தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தற்போது தென்னை சார்ந்த தொழில்களிலும் வடமாநிலத் தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

முற்றுகை

எனவே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை தொழிலாளர் பேரவை சார்பில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தொழிலாளர்கள் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணனை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

'தற்போது குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் முன்வருகின்றனர். இதனையடுத்து அதிக அளவில் வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முதலாளிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவருகிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

நலவாரியம்

வடமாநில தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தென்னை தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம், பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ பிடித்தம், பணி பாதுகாப்பு, ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை தொழிலாளர் நல வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு தொழிலாளர்கள் கூறினார்.

200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்