தூத்துக்குடியில்தொழிலாளி குத்திக்கொலை:சிறுவன் உள்பட 2 பேர் கைது
தூத்துக்குடியில்தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தூத்துக்குடியில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளி
தூத்துக்குடி கிருபை நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). கூலித் தொழிலாளியான இவர், பழைய இரும்பு, பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். இவர் நேற்று மாலை முனியசாமிபுரம் மேற்கு பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் திடீரென பாண்டியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
பரபரப்பு தகவல்
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பாண்டி அந்த பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதை, செல்சினி காலனியை சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் (26) என்பவர் அடிக்கடி கிண்டல் செய்து வந்தாராம்.
நேற்று முன்தினமும் பாண்டி சைக்கிளில் வந்து கொண்டு இருந்த போது, பிரபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பாண்டியை கிண்டல் செய்து உள்ளனர். இதனை பாண்டி கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து பாண்டியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இரண்டுபேர் கைது
இதைத் தொடர்ந்து போலீசார் பிரபாகரன் மற்றும் சிறுவனை நேற்று கைது செய்தனர். மேலும் சிறுவன் நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.