மோட்டார் சைக்கிள் மீது லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

கங்கைகொண்டானில் மோட்டார் சைக்கிள் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-27 19:33 GMT

கங்கைகொண்டானில் மோட்டார் சைக்கிள் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

கரும்பு லாரி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து நெல்லைக்கு கரும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தை ேசர்ந்த கூலி தொழிலாளியான முனியசாமி மகன் மதியழகன் (வயது 32) என்பவர் சாத்தூரில் மாமனார் வீட்டில் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் அந்த லாரியை ஒட்டி வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சோதனை சாவடிகளில் உள்ள தடுப்புகள் மீது மோதாமல் இருக்க, லாரி டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்துள்ளார்.

தொழிலாளி பலி

அப்போது எதிர்பாராதவிதமாக லாரி, மதியழகன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய மதியழகன் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். மதியழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் கரும்புகளுடன் லாரி கவிழ்ந்து கிடந்ததில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கரும்புகளையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்