கோவில் நிலத்தில் தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக்கோரி வழக்கு-மாவட்ட வருவாய் அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் நிலத்தில் தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரி பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-07-03 21:05 GMT


கோவில் நிலத்தில் தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரி பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோவில் நிலத்தில் பட்டா

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் சேவா அறக்கட்டளை தலைவர் தங்கப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

108 வைணவ திவ்ய தேசங்களில் 87-வதாக ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி, ஆத்தூர் பகுதியில் உள்ள அத்திசேரி கோவில்களும் உள்ளன.

இந்த கோவிலுக்கு அப்பகுதியில் 6 ஏக்கர் 83 சென்ட் இடம் உள்ளது. தற்போது இந்த இடத்தை அளவீடு செய்தபோது, 18 பகுதிகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கான பட்டாவும் 18 பேர் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது.

கோவில் சொத்துக்களை எந்த தனிநபருக்கும் விற்பனை செய்ய முடியாது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த இடத்தை ஆய்வு செய்த கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கோர்ட்டில் நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேடிக்கொள்ளுமாறு அறிவிப்பாணை அனுப்பி உள்ளார். எனவே, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரி அனுப்பிய அறிவிப்பாணையை ரத்து செய்தும், கோவில் நிலத்தை பிரித்து 18 தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்