குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரம்

கும்பகோணத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 61 சதவீதம் வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

Update: 2023-08-20 19:28 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 61 சதவீதம் வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து சம்பா சாகுபடி பரப்பளவு குறைந்து காணப்படும்.

அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் 3 ஆயிரத்து 800 எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் 5 ஆயிரத்து 800 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் இலக்கை தாண்டி சாகுபடி செய்திருந்தாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா, தாளடி சாகுபடி

இதையடுத்து சம்பா, தாளடி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் சம்பாவுக்கான சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. பாய்நாற்றங்கால், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது போல் சம்பா, தாளடியும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது குறுவை நெற்பயிர் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கும்பகோணம் வட்டாரத்தில் ஏரகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பகோணம் பகுதியில் இதுவரை 61 சதவீதம் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன.

61 சதவீதம் பணிகள் நிறைவு

சமீபத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் பாதிக்கவில்லை. இதனால் மகசூல் வழக்கம் போல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட பின் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்காக ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், குறுவை சாகுபடியானது கும்பகோணத்தில் போர்வேல் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் சாகுபடி செய்துள்ளனர். கும்பகோணம் வட்டாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடந்துள்ளது. இதுவும் கடந்த ஆண்டை விட கூடுதலான சாகுபடி பரப்பு ஆகும். அறுவடை செய்யப்படும் நெல்மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்கள் வாயிலாக அறுவைக்கு அனுப்பப்படுகிறது. கும்பகோணத்தில் இதுவரை 61 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்துள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்