குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா
தஞ்சையை அடுத்த வல்லத்தில் குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா நடந்தது
குறுவை சாகுபடி பணிகளுக்காக தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தட்டுப்பாடின்றி உரம்
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பெண் ஒருவருக்கு உரம் உள்பட தொகுப்பினை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவா் பேசியதாவது:-
குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.16 கோடியின் மூலம் 90 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைவர். வருங்காலத்தில் விவசாயிகள் நெல் அல்லாத மாற்று பயிர்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதற்கட்டமாக இந்த திட்டத்தின்கீழ் தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், பூதலூர் பகுதிகளை சேர்ந்த 30 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக வல்லம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி கல்வித்துறை சிறப்புகள் பற்றி பாடல் பாடினர்.
பேட்டி
அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அமைச்சர் கூறியதாவது:-
பொதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிந்து தான் மாணவர்கள் வருகிறார்கள். 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் ஏற்கனவே தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2,381 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் எந்த முறையில் இருந்ததோ அதுபோல வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்ச்சி சதவீதம் குறைவு
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படவில்லை. இதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனைக்குரிய விஷயம். மாணவர்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்ளாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் பிரகந்தநாயகி, தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.