குருத்தோலை ஞாயிறு பவனி

பொள்ளாச்சி, வால்பாறையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

Update: 2023-04-02 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

தவக்காலம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள தேவாலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.

மேலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார். அப்போது எருசலேம் நகரை சுற்றிலும் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி பாடலை பாடியவாறு மக்கள் சென்றனர். அதன்படி ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரித்து வருகின்றனர்.

குருத்தோலை ஞாயிறு

இந்த குருத்தோலை ஞாயிறு நேற்று பொள்ளாச்சி, வால்பாறையில் உள்ள தேவாலயங்களில் கடைபிடிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் புனித லூர்து அன்னை ஆங்கில பள்ளி வளாகத்தில் இருந்து அருகில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் வரை கிறிஸ்தவர்கள் தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தி பாடல்களை பாடியவாறு பவனியாக சென்றனர். அதன் பிறகு ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வால்பாறையில் சி.எஸ்.ஐ. தேவாலய ஆயர் பால்சுந்தர்சிங், கத்தோலிக்க ஆலய பங்கு குரு ஜெகன் ஆண்டனி தலைமையில் ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் இருந்து 2 திருச்சபையினரும் இணைந்து குருத்தோலை பவனியை நடத்தி 2 தேவாலயங்களிலும் வழிபாடுகளை நடத்தினார்கள்.

புனித வெள்ளி

நேற்று முதல் புனித வாரம் தொடங்கப்பட்டு வருகிற 7-ந் தேதி புனித வெள்ளியை அனுசரிக்கின்றனர். தொடர்ந்து 9-ந் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இதேபோன்று பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள பிற அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி சென்றனர். அங்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்