வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேக விழா

மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-06-01 18:45 GMT

பனைக்குளம், 

மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வினைதீர்க்கும் வேலவர் கோவில்

மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற வினைதீர்க்கும் வேலவர் கோவில். இங்கு விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத வினைதீர்க்கும் வேலவர், வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக கடந்த 29-ந்தேதி அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, தன பூஜை போன்றவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர்.

கும்பாபிஷேகம்

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 5.45 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றது. காலை 8.05 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்களை வேத விற்பனர்கள் சுமந்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து வானில் கருடன் வட்டமிட மேளதாளங்கள், வேதமந்திரங்கள் முழங்க விநாயகர், வினைதீர்க்கும் வேலவர், வெங்கடாஜலபதி பெருமாள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கருப்பையா சுவாமிகளின் குடும்பத்தினர் மற்றும் டிரஸ்டிகள் செய்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 11 மணி அளவில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்