கடலில் மூழ்கிய குமரி மீனவர் பிணமாக மீட்பு

மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய மீனவரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.;

Update: 2023-09-30 18:45 GMT

குளச்சல்:

மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய மீனவரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

மீன்பிடிக்க சென்றனர்

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

இந்த படகில் பங்குதாரரான மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 தொழிலாளர்கள் கடந்த 25-ந் தேதி குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

3 மீனவர்கள் கடலில் மூழ்கினர்

இந்த விசைப்படகை ஆன்றோ ஓட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு திடீரென கவிழ்ந்தது. இதில் கடலில் மூழ்கிய ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகிய 3 மீனவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

கடலில் தத்தளித்த 13 மீனவர்களை அந்த வழியாக மற்றொரு விசைப்படகில் வந்தவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

இந்தநிலையில் கடலில் மூழ்கிய 3 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. ஆனால் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

ஒருவர் உடல் மீட்பு

நேற்று 2-வது நாளாக அந்த பகுதியில் தேடும் பணி நடந்தது. இதில் பயஸின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. மற்ற 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

பின்னர் மீட்கப்பட்ட பயஸ் உடல் குளச்சலுக்கு கொண்டு வரப்பட்டது. உடனே குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பிரேத பரிசோதனைக்காக பயஸ் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது பயஸ் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பலியான மீனவர் பயஸிற்கு மேரி ஸ்டெல்லா (50) என்ற மனைவியும், பிரதீப் (26) என்ற மகனும் உள்ளனர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

இதற்கிடையே இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து குளச்சல் விசைப்படகு, வள்ளம் கட்டுமர மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தமாக நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மேலும் கரை திரும்பிய விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்கி விற்பனையும் செய்யப்படவில்லை. இதனால் மீன் ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்