குமாரபாளையத்தில்வாடகை கட்டிடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்கள்சொந்த கட்டிடம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update:2023-02-09 00:30 IST

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா ? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தாலுகா அந்தஸ்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி, ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த உற்பத்தி தொழில்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. மேலும் கலை, அறிவியல், மருத்துவம் சார்ந்த கல்வி நிலையங்களும் ஏராளமாக உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜவுளி துறையில் புகழ்பெற்ற இந்த ஊருக்கு தாலுகா அந்தஸ்து இல்லாத நிலைதான் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு தாசில்தார் அலுவலகம், அரசு கலை, அறிவியல் கல்லூரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், குமாரபாளையம் மற்றும் வெப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலகங்கள், சாலை போக்குவரத்து போலீஸ் நிலையம், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், நீதிமன்றம், வேளாண்மை அலுவலகம் ஆகியவை உருவாக்கப்பட்டது.

ஆனால் அரசு கல்லூரியை தவிர்த்து மேற்கண்ட அரசு நிறுவனங்கள் எல்லாம் இன்றளவும் வாடகை கட்டிடத்தில் இயங்கவேண்டிய நிலை தொடர்கிறது.

குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் நகராட்சி திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பயணியர் மாளிகை வளாகத்தில் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் பூர்த்தி செய்யப்படாததால் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

இப்பகுதியில் நூல் மற்றும் துணிக்கு சாயமிடும் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான சாயப்பட்டறை நடத்துபவர்கள் தங்களது சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் ரசாயன கழிவுநீர்களை சாக்கடை கால்வாய் வழியாகவும், கொம்பு ஓடை வழியாகவும் வெளியேற்றி காவிரி ஆற்றை மாசுபடுத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் என்பதால் காவிரி நதிநீர் மாசுபடக்கூடாது என்பதற்காக குமாரபாளையத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனால் இந்த அலுவலகமும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் தான் இயங்குகிறது. இதற்கும் நிலம் கையகப்படுத்தி இருந்தாலும் பணிகள் இன்னும் தொடங்காத நிலை உள்ளது.

கோர்ட்டு

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகில் வாடகை கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கோர்ட்டு இயங்கி வருகிறது. இங்கு ஒரு உரிமையியல் நீதிமன்றமும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றமும் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வசதிகள் இல்லாததால் நீதிமன்ற செயல்பாடுகள் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து போலீஸ் அலுவலகம்

குமாரபாளையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்து போலீஸ் நிலையம் கோட்டைமேடு பைபாஸ் ரோடு மேம்பாலம் அருகில் செயல்பட்டு வருகிறது. ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை கொண்டு இயங்கி வரும் இந்த போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடம் தற்போது வரை தனியார் வாடகை கட்டிடத்தில் தான் இயங்குகிறது. இங்கும் போதிய இடவசதி இல்லாமல் சிரமத்துக்கு இடையே பணிகள் செயல்பட்டு வருகிறது.

தீயணைப்பு நிலையம்

குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம் பள்ளிபாளையம் சாலை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் வெப்படை பகுதியிலும் வாடகை கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. குமாரபாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் செல்லும் சாலையில் கலியனூர் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலை போக்குவரத்து அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

மாநில அரசுகள் மட்டும்தான் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறதா? என்று பார்த்தால் மத்திய அரசு நிறுவனங்களான தபால் நிலையம் மற்றும் எல்.ஐ.சி. அலுவலகங்களும் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலம் இல்லை

சுந்தரம் நகரை சேர்ந்த கே.சி.பழனிச்சாமி:-

குமாரபாளையத்தில் ஜவுளி தொழில் அதிகமாக நடப்பதால் வெளியூர்களில் இருந்து தொழில் நிமித்தமாக குடியேறியவர்கள் அதிகம். சுமார் ஒரு சென்ட் நிலத்திலேயே தறிக்கூடமும், குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள் அதிகம்.

கடந்த 30 ஆண்டுகளுக்குள் நகரின் மக்கள் தொகை பல மடங்கு பெருகிவிட்டது. இதன் காரணமாக மக்களுக்கு பயன்அளிக்கும் வகையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இங்கு அமைக்கப்பட்டு இருந்தாலும், நிலங்கள் இல்லாததால் அரசு கட்டிடம் கட்ட முடியாமல் இன்னும் வாடகை கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. காரணம் அரசு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும், கோர்ட்டு மூலம் தடை உத்தரவு பெற்று இருப்பதாலும் நிலத்தை மீட்க முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

கோவில்களை மீட்க வேண்டும்

குமாரபாளையம் ஒட்டன்கோவிலை சேர்ந்த ஜம்பு முதலியார்:-

குமாரபாளையத்தில் கோவில் நிலங்களை விவசாயம் செய்ய குத்தகைக்கு எடுத்தவர்கள், விவசாயம் செய்யாமல் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு மாதம் பல லட்ச ரூபாய் வாடகை பெற்று வருகின்ற நிலை உள்ளது. அரசு கட்டிடங்கள் தனியார் நிலத்தில் செயல்பட்டு வருவது வேடிக்கையாக உள்ளது.

அரசு சிறப்பு தீர்மானத்தின் மூலம் தேவையான இடங்களில் அரசு அலுவலகங்கள் கட்ட கோவில் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் குமாரபாளையத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அதனை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வரும் தனியார்களிடமிருந்து கோவில்களும் மீட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்