குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு

குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பால் பரபரப்பு;

Update:2022-06-29 23:15 IST

குமாரபாளையம்:

குமாரபாளையம் நகராட்சி கூட்டம் நேற்று காலை 10 அளவில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்பிரமணி நகராட்சி பகுதியில் ஒப்பந்ததாரர் மூலம் கொசுப்புழு தடுப்பு பணி, அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணியை தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இதுதொடர்பான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இந்த பணிகளுக்கான ஒப்பந்ததாரரின் தகுதியில் சந்தேகம் உள்ளதால் இதனை நகராட்சி நிர்வாகம் அனுமதிக்க கூடாது என நகராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன் கேட்டு கொண்டார். இதையடுத்து தீர்மானம் தொடர்பாக நகராட்சி தலைவருக்கும், அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.

இதே தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். சுயேட்சை நகர்மன்றத் தலைவரான விஜய்கண்ணன், நகராட்சியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் செயல்படுவதாக அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவங்களால் நகராட்சி அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்