குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று தொடங்குகிறது; காளி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று நடந்த காளி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனா்.

Update: 2023-10-14 22:45 GMT

காளி பூஜை

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜையும், 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதியில் இருந்து காளி வேடம் அணியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கொடியேற்றம்

தசரா விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.

விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

சூரசம்ஹாரம்

10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்