குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா... பக்தர்கள் ஆடிப்பாடி தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-10-23 13:22 GMT

குலசேகரன்பட்டினம்,

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.

தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபடுகின்றனர்.

விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள் இரவிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

தசரா திருவிழாவையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்கள், முளைப்பாரி எடுத்தும், வேடமணிந்து ஆடிப்பாடி வந்தும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

10-ம் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்