குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் தட்டுப்பாடு; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.;

Update: 2023-03-30 18:45 GMT

குளச்சல், 

குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

நகராட்சி கூட்டம்

குளச்சல் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் நசீர் (தி.மு.க.) தலைமையில் நடந்தது. ஆணையர் விஜயகுமார், துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், பொறியாளர் லதா, நகரமைப்பு அலுவலர் நாகராஜன் மற்றும் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்

ரகீம் (தி.மு.க.)-அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கையை அஜெண்டாவில் கொண்டு வந்த பிறகு மாதனாவிளை குடிநீர் குழாய் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றலாம். அதனால் இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்

தலைவர்:- மாதனாவிளையில் 10 வருடமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. அதனால் ஒத்தி வைக்க வேண்டாம்.

ரமேஷ் (காங்.):- என் வார்டில் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அங்கு வடிகாலை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த இரண்டு பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மாதனாவிளை குடிநீர் குழாய் அமைப்பு தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

செல்வகுமாரி (பா.ஜ.க.):- என் வார்டில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தீர்மானம் நிறைவேற ஒத்துழையுங்கள்.

ஜான்சன் (தி.மு.க.):- நான் அனைத்து வார்டுகளிலும் சிலாப் போட கேட்டிருந்தேன். ஆனால் 2 சிலாப்புகள் தான் போடப்பட்டுள்ளது.

ஷீலா ஜெயந்தி (தி.மு.க.):- எனது வார்டில் சிலாப் போடவில்லை.

வினேஷ் (சுயேச்சை):- வெள்ளியாக்குளத்தில் அரசு புறம்போக்கு இடம் எங்குள்ளது?

மேற்பார்வையாளர்- வெள்ளியாக்குளத்தின் முன் பகுதியில் உள்ளது.

தலைவர்:-குளச்சல் நகராட்சி வரைபடம், கல்லுக்கூட்டம் பேரூராட்சி வரைபடத்தையும் ஆய்வு செய்த பிறகு தான், அந்த புறம்போக்கு இடம் குளச்சல் நகராட்சிக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

ரகீம் (தி.மு.க.)- டெண்டர் போடும் முன்பு மன்றத்திற்கு தெரிவியுங்கள்.

தலைவர்:- டெண்டர் இப்போது ஆன் லைனில் தான் போடப்படுகிறது.

ஜாண்சன்:- ஆன் லைனில் போடும்போது, நகராட்சி அறிவிப்பு பலகையிலும் தெரிவிக்கலாம்.

தலைவர் :- சரி, அறிவிப்பு பலகையிலும் போடலாம்.

ஷீலா ஜெயந்தி:- எனது வார்டில் சீராக குடிநீர் வினியோகம் நடக்கவில்லை.

தலைவர்:- கோடையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

சாலையோர கடைக்கு கட்டணம்

மேரி (தி.மு.க.):- 22 மற்றும் 23 ஆகிய வார்டுகளில் குடிநீரில் உப்பு கலந்து வருகிறது.

ரமேஷ்:- சந்தை வாடகை குத்தகை பிடித்திருப்பவர் சாலையோர கடைகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

ரகீம்:- இதற்கு அரசாணை உள்ளதா?.

தலைவர்:- அரசாணை இருந்தால் சாலையோர கடைகளில் கட்டணம் வசூலிக்கப்படாது.

ஆணையர்:- சாலையோர கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கி அவர்கள் தொழில் விருத்திக்கு வங்கி கடனும் அளிக்க அரசாணை உள்ளது. கட்டணம் வசூலிக்கக் கூடாது.

ஆறுமுகராஜா (அ.தி.மு.க.):- கடந்த காலத்தில் நகராட்சி ஊழியர்கள் கட்டணம் வசூலித்தனர்.

ரகீம்:- அப்போது அ.தி.மு.க. ஆட்சி. இப்போது தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியில் சாலையோர கடைகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

பனிக்குருசு:- புதிய பஸ் நிலையம் கட்டும் போது கிடைக்கும் கட்டிட கழிவுகளை கொட்டில்பாடு கடலரிப்பு பகுதியில் போட்டு நிரப்ப வேண்டும்.

மருந்து தட்டுப்பாடு

ஷீலா ஜெயந்தி:- கடை பெயர் மாற்றத்திற்கு கவுன்சிலர் அளித்த மனு தொடர்பாக கவுன்சிலரிடம் கூறாமல், மனுதாரரிடம் சென்று பெருந்தொகை ஆகும் எனக்கூறி கவுன்சிலரை அவமதித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியவாறே தரையில் அமர்ந்தார்.

ஆணையாளர்:- நீங்கள் ஏன்?. இதை என் கவனத்திற்கு கொண்டு வரவில்லை.

பின்னர் துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் கவுன்சிலர் ஷீலா ஜெயந்தியை சமாதானம் செய்து இருக்கையில் அமர செய்தார்.

ஆறுமுகராஜா:- குளச்சல் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. டாக்டர்கள் இல்லை. கடந்த 26-ந் தேதி பாம்பு கடித்து அரசு மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து போனார். குளச்சல் மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை கிடைத்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

சுரேஷ்குமார் :- கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு நடத்தி சென்றும் மருத்துவமனையில் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பஸ் நிலைய பூமி பூஜை

குளச்சல் நகராட்சி காமராஜர் பஸ் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

இதில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையர் விஜயகுமார் கூட்டத்தின் இடையே தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்