தாழ்வாகச்செல்லும் மின்கம்பியால்விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-01-03 16:17 GMT


குடிமங்கலம் அருகே சிந்திலுப்பு கிராமத்தில் தாழ்வாக மின் கம்பிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.

கனரக வாகனம்

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனிக்கடவு ஊராட்சி. அனிக்கடவு ஊராட்சிக்குட்பட்ட சிந்திலுப்பு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிந்திலுப்பு கிராமத்தில் இருந்து ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்கின்றன.

சாலையில் இருபக்கமும் நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் ரோட்டின் குறுக்கே செல்லும் மின்கம்பிகள் குறைவான உயரம் கொண்டவையாக உள்ளன.

நடவடிக்கை

சிந்திலுப்பு கிராமத்திலிருந்து ராமச்சந்திராபுரம் செல்லும் சாலையில் தினமும் அதிகளவு பாரங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இரவு நேரங்களில் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது எனவே சாய்ந்த நிலையில் நிற்கும் மின் கம்பங்களை நேராக நட வேண்டும். விபத்து ஏற்படாமல் தடுக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்