கூடலூர் ஆர்.டி.ஓ. விசாரணை
முதுமலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு அரசு நிலத்தை விற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கூடலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.;
முதுமலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு அரசு நிலத்தை விற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கூடலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
மாற்றிடம் வழங்கும் திட்டம்
கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி, புலிகள் காப்பக பகுதியில் உள்ளது. நாகம்பள்ளி, முதுகுளி, கோலி மலை, மண்டக்கரா உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 2008-ம் ஆண்டு ஊராட்சி மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் மறு குடியமர்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு கட்டமாக வெளியேற்றி சன்னக்கொல்லி, மச்சி கொல்லி, பேபி நகர் உள்ளிட்ட இடங்களில் மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு மச்சிக்கொல்லி, பேபி நகர் பகுதியில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், அரசு நிலத்தை விற்றதாக வனத்துறையினர் மற்றும் சிலர் மீது ஆதிவாசி மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
மேலும் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை கடந்த மாதம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமையிலான வருவாய்த் துறையினர் போஸ்பாரா, மச்சிக்கொல்லி, பேபி நகர், மண்வயல் உள்ளிட்ட இடங்களில் மறு குடியமர்வு செய்யப்பட்ட ஆதிவாசி மக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஆதிவாசி மக்கள் தங்களது புகாரை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அரசு நிலத்தை ஆதிவாசி மக்களுக்கு விற்றது தொடர்பான புகார் மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். பின்னர் விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றனர்.