மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கடன் வழங்குவது நிறுத்தம்:அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கிற கடன் அளவு அதிகமாகிவிட்டதுமத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கடன் வழங்குவதை நிறுத்திவிட்டனர். ஆனால், அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கிற கடன் அளவு அளவுக்கு அதிகமாகிவிட்டது என்று மத்திய அரசு மீது அழகிரி குற்றம்சாட்டினார்.

Update: 2023-02-06 18:45 GMT


சிதம்பரம், 

எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்ததாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஒரு வங்கி அருகே, கடலூா் தெற்கு மாவட்டம் மற்றும் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடபெற்றது.

இதற்கு நகர தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முறைகேடான செயல்

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி, பேசினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 2 பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் அதானிக்கு அளித்திருக்கின்ற பொருளாதார உதவியை வன்மையாக கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

முறைகேடாக அந்த பணத்தை அளித்து இருப்பது தான் குற்றச்சாட்டு ஆகும். பிரதமர் மோடி தன்னுடைய நண்பரை வளர்ப்பதற்காகவும், ஒரு தனிநபரை வளர்ப்பதற்காகவும் இந்த செயலை செய்து இருக்கிறார்.

நிதி ஒதுக்கீடு குறைப்பு

கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்கும் வகையில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டமாகும். இதை ஐ.நா. பாராட்டியது. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு பிரதமர் மோடியின் ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்க வேண்டும் என்று நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் தற்போது, மாணவர்களுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

தார்மீகத்துக்கு எதிரானது

ஆனால், அம்பானிக்கும், அதானிக்கும் கொடுக்கின்ற கடன் அளவுக்கு அதிகமாக போயிருக்கிறது. ஏறக்குறைய அந்த கம்பெனியின் தவறான பொருளாதார கொள்கையினால், 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுமக்களின் பங்குகள் அதானியிடம் இருக்கிறது.

பொதுமக்கள் மூலதனத்தில் நடக்க கூடிய ஆயுள் காப்பீட்டு கழகம், ஸ்டேட் பேங்க் அவர்களுக்கு நிதி அளிப்பது விரோதமானது, தார்மீகத்துக்கு எதிரானது. எனவே காங்கிரஸ் கட்சி இதை கடுமையாக எதிர்க்கிறது. எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி ஆரம்பத்தில் இருந்து தவறை சுட்டிக்காட்டினார். இன்று அனைத்தும் உண்மையாகிறது.

எங்கள் வேட்பாளர் வெற்றிபெறுவார்

ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார். அ.தி.மு.க.வை விட நாங்கள் பெரிய கட்சி என்று சொல்லும் பா.ஜ.க.வை சேர்ந்த அண்ணாமலை, தற்போது மாத்தி சொல்கிறார். அ.தி.மு.க. பெரிய கட்சி அவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடட்டும் என்று சொல்லி வெற்றிகரமாக வெளியே வந்துள்ளார்.

எங்களுடைய கூட்டணி ஆரோக்கியமானது, நேர்மையானது உறவுகளுக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லக்கூடியது. அதே நேரத்தில் எங்கள் கூட்டணி தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கள் வெற்றிக்கு பெரிய காரணமாக இருக்கிறார். அவருடைய முயற்சி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத்குமார், நகர துணைத் தலைவர்கள் இளங்கோவன், சின்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் குமராட்சி ரங்கநாதன், நகர துணை் தலைவர் சம்பந்தமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் அபு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்