குப்பை கூளமாக காட்சி அளிக்கும் கிரிவலப்பாதை
திருவண்ணாமலை கிரிவலப்பாதை குப்பை கூளமாக காட்சி அளிப்பதால் தூய்மையாக வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை குப்பை கூளமாக காட்சி அளிப்பதால் தூய்மையாக வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரிவலப்பாதை
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதை சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் இந்த மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பவுர்ணமி சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அதுமட்டுமின்றி தினமும் குறைந்த அளவிலான பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.
கிரிவலப்பாதை நகராட்சி நிர்வாகத்திற்கும், ஊரக வளர்ச்சிக்கு துறைக்கும் உட்பட்டது. கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதை தடுக்கவும், தூய்மையாக பராமரிக்கவும் அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் குப்பை கூளமாக காட்சி அளிக்கின்றது. கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் குப்பைகள் குவியலாக உள்ளது. மேலும் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி அதன் அடியில் தேங்கி கிடக்கின்றன. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நடைபாதையில் நடந்து செல்லாமல் சாலையில் நடந்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி நடைபாதையில் பல இடங்களில் சின்ன, சின்ன செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அந்த செடிகளும் அகற்றப்படாமல் உள்ளது. பெரும்பாலும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் வெளி மாவட்டம், மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
குப்பை, கூளமாக காட்சி அளிக்கும் கிரிவலப்பாதையின் அவல நிலையை கண்டு பக்தர்கள் வேதனை அடைகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வெளியூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் பெருமையாக பேசும் அளவிற்கு கிரிவலப்பாதையை தினமும் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.