பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 320 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.;
பூண்டி ஏரி
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இந்த ஏரியில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்வரத்து குறைந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதியின் பங்கீடுத் திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசை கேட்டுக்கொண்டனர்.
தண்ணீர் திறப்பு
அதன் பேரில் கடந்த 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் 3-ந்தேதி பூண்டி ஏரிக்குச் சென்றடைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 450 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த பருவ மழையின் போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரை கள் சேதமடைந்தன. இந்தக்கரைகளில் சீரமைப்புப்பணிகள் நடைபெற்றதால் கிருஷ்ணா நதி நீரை அருகே உள்ள கண்ணன் கோட்டை ஏரிக்கு திருப்பி விட்டிருந்தனர். இதனால் கண்ணன் கோட்டை ஏரியில் முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டியது.
நீர்வரத்து அதிகரிப்பு
இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாய் சீரமைப்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜீரோ பாயிண்டியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்தத் தண்ணீர் நேற்று முன்தினம் மதியம் பூண்டி ஏரிக்குச் சென்றடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பூண்டி எரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 320 கனஅடியாக உயர்ந்துள்ளது.
1.007 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு
நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26.12 அடியாக பதிவாகியது. 1.007 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.