சிவகிரி பொன்காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா; இன்று நள்ளிரவு தீப்பந்தம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது
சிவகிரி பொன்காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா; இன்று நள்ளிரவு தீப்பந்தம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது;
சிவகிரி
சிவகிரி அருகே உள்ள தலையநல்லூரில் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் விழா கடந்த மாதம் 28-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை தொடங்கி பகல் 2 மணி வரை பக்தர்கள் ஊஞ்சலூர் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து நடை பயணமாக கோவிலுக்கு வந்தார்கள். இதேபோல் அலகு குத்திக்கொண்டு வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இன்று (புதன்கிழமை) பொங்கல் விழா நடக்கிறது. பக்தர்கள் பொங்கல் வைத்து பொன்காளியம்மனுக்கு மாவிளக்கு பூஜை செய்வார்கள்.
இன்று நள்ளிரவு குதிரை துளுக்கு பிடித்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் வழிநெடுக தீப்பந்தம் பிடிக்க தேரில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு அம்மன் வசந்த மண்டபம் புறப்படுதலும், இரவு வண்ணார கருப்பண சாமி பொங்கல் வைத்து படைத்தலும், நாளை மறுநாள் மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது.