ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா

ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நேற்று நடந்தது.

Update: 2022-12-01 21:49 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் -பெரியமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நேற்று நடந்தது.

குண்டம் -தேர்த்திருவிழா

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன் மற்றும் பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று இரவு கம்பம் நடும் விழா நடந்தது. இதையொட்டி பெரியமாரியம்மன் வாய்க்கால் கரையில் இருந்து கம்பங்கள் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 2 கோவில்களின் முன்பும் நடப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த கம்பத்துக்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட உள்ளனர். வருகிற 11-ந்தேதி காலை 9 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து தேர்திருவிழாவும் நடக்கிறது.

மாவிளக்கு பூஜை

வருகிற 12-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவிலுக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி பகல் 11 மணிக்கு பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். பின்னர் மாவிளக்கு பூஜை நடக்கிறது. 14-ந்தேதி இரவில் கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது.

அப்போது கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. 15-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் கேபிள் செந்தில்குமார் தலைமையில் ஊர் கொத்துக்காரர்கள் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்து வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்