கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நிறைவு- காய்கறிகளை சிறப்பாக காட்சிப்படுத்திய விவசாயிகளுக்கு பரிசுகள்

கோத்தகிரியில் 2 நாட்கள் நடைபெற்ற 12-வது காய்கறி கண்காட்சி நிறைவடைந்தது. காய்கறிகளை சிறப்பாக காட்சிப்படுத்திய விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-05-08 10:31 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் 2 நாட்கள் நடைபெற்ற 12-வது காய்கறி கண்காட்சி நிறைவடைந்தது. காய்கறிகளை சிறப்பாக காட்சிப்படுத்திய விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

2-வது நாள் கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக நேற்று முன் தினம் கோத்தகிரி நேரு பூங்காவில் 12 -வது காய்கறி கண்காட்சி தொடங்கியது. சுற்றுலா பயணிகளை கவர சுமார் 2 டன் காய்கறிகளினால் ஆன பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சோளம் மற்றும் கம்பு கதிர்கள், டிராகன், யானைகள், முதலை, மயில்கள், சிவலிங்கம், பவானி சாகர் அணை, மலபார் பைட், ஹார்பில், போன்ற சிற்பங்கள் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பூங்காவில் மலர் செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்துள்ளன. சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

காய்கறி கண்காட்சி தொடங்கிய அன்று சுமார் 8 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை புரிந்தனர். நிறைவு நாளான நேற்று சுமார் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டு களித்தனர்.

விவசாயிகளுக்கு பரிசுகள்

சுற்றுலா பயணிகள் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட சிற்பங்களைகண்டு அவற்றின் இடையே நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். காய்கறி கண்காட்சியின் நிறைவு விழாவான நேற்று வீட்டு காய்கறி தோட்டம் மற்றும் காய்கறி காட்சி போட்டிகளில் கலந்து கொண்டு காட்சி அரங்குகள் அமைத்து வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் 50 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி வழங்கினார். இந்த விழாவில் குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்னகுமார், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, தோட்டக்கலைதுறை இணை இயக்குனர் கருப்புசாமி, துணை இயக்குனர் ஷிபிலா மேரி, கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் அருண்குமார், உதவி இயக்குனர்கள் ஐஸ்வர்யா, பாலசங்கர், அனிதா, ஜெயந்தி, விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்