முழு கொள்ளளவை எட்டியது: கோமுகி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, வினாடிக்கு 400 கனஅடி நீர் உபரிநீராக வெளியெற்றப்பட்டு வருகிறது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது கோமுகி அணை. 46 அடி கொள்ளளவு கொண்ட அணையில், பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீர் சேமித்து வைக்கப்படும். அணையின் மூலம் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது கல்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் பொட்டியம், மல்லிகைப்பாடி ஆறுகள் ஆகும். இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்தும் அதிகரித்து கணப்பட்டது. இதன் மூலம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
உபரி நீர் திறப்பு
நேற்று முன்தினம் மாலையிலும் பரவலாக மழை நீடித்தது. இதனால் அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் மூலம், நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்மட்டம் 44 அடியை எட்டியது. இதை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு அணையில் இருந்து கோமுகி ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்து குறைந்தது
இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதியில் நேற்று சற்று மழை ஓய்ந்து காணப்பட்டது. இதனால் நீர் வரத்து வினாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது. முன்னதாக தண்ணீர் திறப்பு காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
வழக்கமாக கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்காக அக்டோபர் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது முன்கூட்டியே அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.