கொல்லிமலை அடிவாரத்தில்ஆக்கிரமிப்பு கிணற்றை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சேந்தமங்கலம்:
கொல்லிமலை அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு கிணற்றை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஊர் கிணறு
சேந்தமங்கலம் அருகே காரவள்ளி கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தின் அருகே சுமார் 70 அடி ஆழம் கொண்ட ஊர் கிணறு அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது அந்த கிணற்றையொட்டி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அடிவார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுத்தனர்.
அதில் காரவள்ளி பகுதியில் உள்ள ஊர் கிணற்றை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், அந்த கிணற்றை மீட்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் புகார் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று காலை அடிவார பகுதியில் கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த சேந்தமங்கலம் தாசில்தார் ராஜகோபால், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் கடந்த சில மாதங்களாக ஊர் கிணற்றை ஆக்கிரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிணற்றில் இருந்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர். அப்போது சேந்தமங்கலம் தாசில்தார் ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ராஜியிடம், பிரச்சினைக்குரிய கிணற்றை தவிர்த்து அதன் அருகே மற்றொரு கிணறு வெட்டுவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகள் அவதி
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட காரவள்ளியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிணற்றை ஆக்கிரமித்ததாக கூறப்படும் தனிநபர் தரப்பினரை சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு வரவழைத்து தாசில்தார் ராஜகோபால் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த மறியல் போராட்டம் காரணமாக நேற்று காலை 7 மணி முதல் 8 மணி வரை அங்குள்ள அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டன. இதனால் கொல்லிமலைக்கு வந்த சில சுற்றுலா பயணிகள் ஓட்டல்கள் மூடப்பட்டதால் சாப்பிட வழியின்றி சிறிது நேரம் அவதி அடைந்தனர்.