கோழிப்பண்ணையில் செத்த கோழிகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம்

மடத்துக்குளத்தையடுத்த காரத்தொழுவில் உள்ள கோழிப்பண்ணையில் செத்த கோழிகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.;

Update: 2023-06-14 17:16 GMT

நாய்கள் கூட்டம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

காரத்தொழுவு பகுதியில் தனியார் நிறுவனத்தின் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது.இந்த பண்ணையில் பல ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் நோய் பாதிப்பு, வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோழிகள் அவ்வப்போது இறக்கின்றன. அவ்வாறு செத்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பண்ணையை ஒட்டிய தோப்பில் பள்ளம் தோண்டி குவித்து வைத்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் கோழிகளின் உடல்களை வாயில் கவ்விக் கொண்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன. மேலும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. மேலும் அவ்வப்போது குழந்தைகளைத் துரத்திக் கடிப்பதுடன் கால்நடைகளையும் கடிக்கின்றன. சமீப காலங்களாக ஆடுகள், கன்றுகள் போன்றவற்றை வேட்டையாடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நாய்கள் கூட்டம் இதுபோன்ற சூழலில் தான் உருவாகிறது.

பாசன வாய்க்கால்

தோப்புகளில் உள்ள பள்ளங்களில் திறந்த நிலையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் செத்த கோழிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. அழுகிய கோழி இறைச்சிகளை காக்கைகள் தூக்கி வந்து குடிநீர், உணவுப்பொருட்கள் போன்றவற்றில் போடுகிறது. இதனால் பலவிதமான நோய்த் தொற்றுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுதவிர சில வேளைகளில் அருகிலுள்ள பாசன வாய்க்காலில் செத்த கோழிகளை மூட்டைகளில் கட்டி வீசிச் செல்லும் சம்பவமும் நடைபெறுகிறது. இதனால் பாசன நீர் பாழாவதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

எனவே பண்ணையில் செத்த கோழிகளை பள்ளங்களில் சுண்ணாம்பு அல்லது பிளீச்சிங் பவுடர் போட்டு புதைக்க வேண்டும்.

இல்லையென்றால் முறையாக ரிங் அமைத்து எரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்