கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்;
கடத்தூர்
கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கார், வேன், பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கவும் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர். அங்கு ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்துவிட்டு சென்றனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் சூடான மீன் வறுவல்களையும் வாங்கி ருசித்துச் சாப்பிட்டனர். சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை அங்குள்ள பூங்காவில் வைத்து உண்டனர்.
குழந்தைகள் அங்கு பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மொத்தம் 6 ஆயிரம் பேர் கொடிவேரி அணைக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.