கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-30 16:03 GMT

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், அதன் தலைவர் சுவேதாராணி கணேசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயசந்திரிகா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன்படி பெருமாள்மலை பகுதியில் வத்தலக்குண்டு பிரதான சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். கூக்கால் ஊராட்சி பகுதியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும். வில்பட்டி ஊராட்சி பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். வெள்ளக்கவி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் பேசினார். அவர் பேசுகையில், வெள்ளக்கவி கிராமத்தில் 5½ கிலோமீட்டர் தூரம் மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1½ கிலோமீட்டர் தூரத்துக்கு, ரூ.10 லட்சத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதேபோல் பேத்துப்பாறையில் உள்ள அஞ்சுவீடு நீர்வீழ்ச்சி பகுதியில் பாதுகாப்பு வேலி ரூ.5 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கிற ஏழை-எளிய மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூக்கால் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு கட்டிடம் கட்டப்பட உள்ளது என்றார். கூட்ட முடிவில் ஊராட்சி பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள், கம்பளி, கையுறை மற்றும் பல்வேறு உபகரணங்களை ஒன்றிய தலைவர் வாங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்