கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.91¾ லட்சத்துக்கு காய்கறி விற்பனை
கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.91¾ லட்சத்துக்கு காய்கறி விற்பனையானது
கோபி அருகே மொடச்சூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாதிபாளையம், சுண்டப்பாளையம், காமராஜ்நகர், செட்டியார்பாளையம் வெள்ளாங்கோவில், கொளப்பலூர் மற்றும் கோபியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்கள், கீரை ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
கடந்த மாதம் ஆகஸ்டில் மட்டும் 919 விவசாயிகள் 2 லட்சத்து 88 ஆயிரத்து 673 கிலோ காய்கறியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் மொத்தம் ரூ.91 லட்சத்து 72 ஆயிரத்து 63-க்கு காய்கறி விற்பனையானது. நுகர்வோர்கள் 31 ஆயிரத்து 755 பேர் காய்கறியை வாங்கிச் சென்றனர்.
மொடச்சூர் உழவர் சந்தைக்கு காய்கறியை விற்பனைக்காக கொண்டு வரும் புதிய விவசாயிகள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முத்திரைத்தாள் அளவு கொண்ட 4 புகைப்படங்களை உழவர் சந்தை நிர்வாக அதிகாரியிடன் வழங்க வேண்டும்.
மேலும் கோபியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து காய்கறியை அரசு டவுன் பஸ் மூலம் கட்டணமில்லாமல் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக குடிநீர் வசதி, மின்சார வசதி அமைக்கப்பட்டுள்ளது என உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.