சென்னை அருகே கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை அருகே கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.;

Update:2023-03-11 10:29 IST

சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைத்திடவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது பயணத்தை சிரமமின்றி இனிதாக மேற்கொள்வதற்காக கடந்த 2019-ம் ஆண்டு கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் 44.74 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பஸ் நிலையம் ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு நேற்று காலை கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் இறுதி கட்ட பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் திருச்சி ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்ததை மதுரை ஐகோர்ட்டு கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலைத்துறை திருக்கோவில் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அரசு முதன்மை செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அதுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்