மடத்துக்குளம் பகுதியில் கைவிடப்பட்ட கல்குவாரி பள்ளங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விதிமீறல்கள்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகளில் குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் கல் எடுக்கக்கூடாது என்று விதிகள் உள்ளது. இதனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பல கல் குவாரிகள் கைவிடப்படுகின்றன. அவ்வாறு கைவிடப்படும் கல் குவாரி பள்ளங்கள் பலவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
'பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கைவிடப்பட்ட கல்குவாரி பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த பள்ளங்களில் தேங்கியுள்ள நீரில் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் இறங்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சுகாதார சீர்கேடுகள்
நரசிங்காபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதியிலுள்ள குவாரி பள்ளங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஒருசில இடங்களில் இறந்த கோழிகள், நாய், பூனை போன்றவற்றையும் தூக்கி வீசிச் செல்கின்றனர். இந்த கழிவுகள் மழைநீருடன் கலந்து அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு காரணமாகிறது. எனவே கல்குவாரி பள்ளங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் மடத்துக்குளம் பகுதிகளில் சாலையோரங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகள் உள்ளிட்ட நீருடன் வினை புரியாத திடக்கழிவுகளை இதுபோன்ற கல் குவாரி பள்ளங்களில் கொட்டி நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கைவிடப்படும் குவாரி பள்ளங்களில் தேங்கும் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் பாதுகாப்பு வேலிகள் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்'.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.