கிண்டி கிங்ஸ் முதியோர் ஆஸ்பத்திரி கட்டிட உறுதித்தன்மை குறித்து ஆராய ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 3 பேர் குழு அமைப்பு

கிண்டி கிங்ஸ் முதியோர் ஆஸ்பத்திரி கட்டிட உறுதித்தன்மை குறித்து ஆராய ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Update: 2022-05-26 07:21 GMT

சென்னையை அடுத்த கிண்டி மடுவின்கரை, ஆலந்தூர் பகுதிகளில் மழை காலங்களில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்படுகிறது. மேலும் கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் 2 கால்வாய் பாலங்கள் அமைத்து மழைநீரை அடையாறு ஆற்றுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி, மண்டலக்குழு தலைவர்கள் துரைராஜ், என்.சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் குணாளன், முரளிகிருஷ்ணன், துணை கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், உதவி கமிஷனர்கள் பாஸ்கரன், திருமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் மத்திய அரசின் நிதியுடன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட முதியோர் ஆஸ்பத்திரி, கொரோனா காலத்தில் கொரோனா ஆஸ்பத்திரியாக பயன்பட்டு வந்தது. தற்போது கொரோனா இல்லாத நிலை உருவாகி உள்ளது.

இதனால் அந்த ஆஸ்பத்திரியை மீண்டும் முதியோர் ஆஸ்பத்திரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்தன. இதனால் ஆஸ்பத்திரியின் தரம், உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டு கொண்டார்.

எனவே முதியோர் ஆஸ்பத்திரி கட்டிடம் உறுதி தன்மையுடன் உள்ளதா? என்பது குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி.பேராசிரியர் மனுசந்தானம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு நடத்தி அறிக்கை தந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்