அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. அதேபோல், மழலையர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளும் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகுதான் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரை மழலையர்களின் கல்வி உரிமை பறிக்கப்படக் கூடாது. குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் அந்தப் பருவத்தில் அவர்களுக்கு முறைச்சார்ந்த கல்வி வழங்குவது அவசியம் ஆகும்.
இதை உணர்ந்து அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளைத் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.