சிறுமியை கடத்தி பலாத்காரம்:வேன் டிரைவருக்கு 10 ஆண்டு சிறைஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பலாத்காரம்:செய்த வேன் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டைன விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

Update: 2023-08-10 21:21 GMT

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வேன் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

வேன் டிரைவர்

குறிச்சி பகுதியை சேர்ந்த அம்மாசை என்பவருடைய மகன் ஈஸ்வரன் (வயது 34). இவர் மினி சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தையல் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். அப்போது அந்த சிறுமியை ஈஸ்வரன் அடிக்கடி சந்தித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 28-9-2019 அன்று தையல் வகுப்புக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. சிறுமியுடன் ஈஸ்வரன் பழகுவது தெரிந்து இருந்த சிறுமியின் பெற்றோர் மொடக்குறிச்சி பகுதிக்கு சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் சரியான பதில் சொல்லவில்லை. ஆனால் பெற்றோர் தொடர்ந்து தேடிவந்தனர்.

பாலியல் பலாத்காரம்

இந்தநிலையில் கடந்த 1-10-2019 அன்று சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்தார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது ஈஸ்வரன் சிறுமியை சரக்கு வேனில் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் கடத்தி சென்றுள்ளார். பின்னர் உறவினர் வீட்டில் தங்கவைத்து கட்டாய திருமணம் செய்ததும், அவரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. மேலும், சிறுமியின் பெற்றோர் அவரை தேடி வருவதை தெரிந்து கொண்டு, சிறுமியை அழைத்து வந்து வீட்டின் அருகே விட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஈஸ்வரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

10 ஆண்டு சிறை

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஆர்.மாலதி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஈஸ்வரனுக்கு சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி ஆர்.மாலதி அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். அதன்படி ஈஸ்வரனுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்