பெண் வியாபாரி மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு

திண்டுக்கல்லில் பெண் வியாபாரி மீது மண்எண்ணெய் குண்டு வீசி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-25 01:00 GMT

திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 55). இவர் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே எலுமிச்சை வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மகன் சதீஷ். இவரது மனைவியின் தங்கை கார்த்திகா. இவர், குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு, அக்காள் கணவர் வீட்டுக்கு கார்த்திகா வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சதீஷ் வீட்டுக்கு அடிக்கடி சென்ற பாலமுருகன், தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி நாகலட்சுமி வழக்கம் போல் எலுமிச்சை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன், அவருடைய நண்பர்கள் மணிகண்டன் (33), சூர்யா (32) ஆகியோர் நாகலட்சுமியிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணெய் குண்டு பாட்டிலை நாகலட்சுமியை நோக்கி வீசினர். நல்லவேளையாக அது தரையில் விழுந்து நொறுங்கியது.

இதில் பாட்டில் துகள்கள் சிதறி நாகலட்சுமி மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த நாகலட்சுமி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் குடைப்பாறைப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்