கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக டிஜிபி உத்தரவு

தமிழக எல்லையோர மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் இணைந்து வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2023-10-29 14:47 IST

சென்னை,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டரங்கு இன்று காலை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் பங்கேற்று மத வழிபாடு செய்தனர். இந்த நிலையில், மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது.

கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் 3 முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், மத வழிபாட்டு கூட்டரங்கில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள குண்டு வெடிப்பு தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசினார். அப்போது குண்டு வெடிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு செல்ல அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் குண்டு வெடிப்பு குறித்து உடனடியாக விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ.க்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என கேரள போலீசார் உறுதி செய்துள்ளனர். 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாகவும் கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்